உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதனை காண்பதற்கு மதுரை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (2ம் தேதி) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிக்கு துவங்கி நடைபெற்றது. முன்னதாக இன்று காலை நான்கு மணி அளவில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதியில் வலம் வந்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கும் நேரத்தில் ஏராளமான பெண்கள் தங்களது புது தாலியை மாற்றிக்கொண்டனர்.