Skip to main content

அபிஷேகப் பிரியர் சிவபெருமான்; 12 மாத பௌர்ணமி அபிஷேகமும் பலன்களும்!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

God sivan 12 Months Abhishekam and Benefits 

 

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நன்னாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதை தரிசிக்கலாம். மேலும், ஆகம முறைப்படி குறிப்பிட்ட நாளில் அமையும் நட்சத்திரத்துக்குரிய பொருள் அபிஷேகப் பொருளாக அமைந்திருக்கும். அதற்கேற்ற பலன்களும் உண்டு.

 

சித்ரா பௌர்ணமி - மரிக்கொழுந்து இடம்பெறும். வாழ்வில் மிகுந்த பெருமையும் புகழையும் கொடுக்கும்.

 

வைகாசிப் பௌர்ணமி - சந்தனத்தால் அபிஷேகம் செய்வர். இதனால் மனை, வீடு முதலிய பாக்கியம் கிடைக்கும்.

 

ஆனிப் பௌர்ணமி - மா, பலா, வாழை எனும் முக்கனிகளால் அபிஷேகம் நடைபெறும். கேட்ட நல்லவரம் கிடைக்கும்.

 

ஆடிப் பௌர்ணமி - பசும்பால் அபிஷேகம். பயம் நீங்கும்.

 

ஆவணிப் பௌர்ணமி - வெல்லம் - பாவம், தோஷம் நீங்கும்.

 

புரட்டாசி பௌர்ணமி - கோதுமை நெய்யப்பம். இதனால் ஐஸ்வரியம் தங்கும்.

 

ஐப்பசி பௌர்ணமி - அன்னாபிஷேகம். செல்வம், கல்வி, ஞானம், வீடுபேறு மற்றும் பசித்த வேளையில் உணவு தேடிவரும்.

 

கார்த்திகை பௌர்ணமி - பசுநெய் அபிஷேகம். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

 

மார்கழி பௌர்ணமி - நறுமண வெந்நீர் அபிஷேகம். நோய் நொடிகள் நீங்கி ஆயுள் கூடும்.

 

தை பௌர்ணமி - கரும்புச்சாறு அபிஷேகம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

 

மாசி பௌர்ணமி - பசு நெய்யால் தோய்த்த கம்பளி சிவலிங்கத்தின் மீது போர்த்தப்படும். குழந்தைச் செல்வம் கிட்டும்.

 

பங்குனி பௌர்ணமி - பசுந்தயிரால் அபிஷேகம் நடைபெறும். இதனைத் தரிசித்தால் மனதிற்கேற்ற வாழ்க் கைத்துணை அமையும். இல்லறத்தில் சுகம் காணலாம்.

 

அந்த வரிசையில் ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் போற்றப்படுகிறது.

 

ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அந்நாளில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவத்தில் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் அன்னாபிஷேகத்திற்குரிய பொருட்களை கோவில் நிர்வாகத்தினரிடம் அளித்து கலந்து கொண்டால் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. உலகிலுள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்து காக்கும் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவலிங்கத் திருமேனியில் அன்னம், காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.

 

‘அன்னம் பிராணமயம்' என்று வடமொழியும், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சங்கத்தமிழும் அன்னத்தின் சிறப்பைப் போற்றுகின்றன. மேலும்,

‘அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ

சொரூபம். ஆகையால் அன்னமே உயர்

வானது' என்று வேதம் சொல்கிறது.

‘அன்னம்தான் ஜீவன்' என்கிறது சாஸ்திரம்.

 

‘தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டும் உண்பவன் பாவப் பிண்டத்தைதான் உண்கிறான்' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

‘அன்னம் அளி... அன்னம் அளி... ஓயாமல் அன்னம் அளி' என்கிறது பவிஷ்ய புராணம்.

‘உலகிலுள்ள மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது' என்று வேத நூல்கள் கூறுகின்றன.

 

‘ஐப்பசிப் பௌர்ணமியில் சிவலிங்க மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் சிவாம்சம் பெற்றது. அதாவது சிவரூபமாகும். இதனைத் தரிசிப்பதால் ஒரே சமயத்தில் கோடி லிங்கங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்' என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இதனையெல்லாம் நினைவுகூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசிப் பௌர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

 

பொதுவாக அன்னாபிஷேகம் மாலை நேரத்தில் நடைபெற்றாலும், சில கோவில்களில் முற்பகலிலும் நடைபெறுகிறது. தில்லையில் ரத்னசபாபதிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு, பிரசாதமாக அளிக்கப்படும் அன்னத்தை உண்டால் குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிட்டும். கல்வி, கலை, ஞானத்தில் சிறந்து விளங்குவர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் வசந்தம் வீசும் என்று சொல்லப்படுகிறது.பொதுவாக ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளமும் நலமும் அளிக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.