Skip to main content

மாபெரும் புண்ணியம் தரும் மகாளய பட்சம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைவதால் பூமிக்கு ஒரு காந்த சக்தி ஏற்படும். மற்ற திதிகளில் ஏதாவது ஒன்று, இரண்டு கிரகம் திதி சூன்யம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றிபெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

அமாவாசையன்று சூரிய கலையும் சந்திர கலையும் சேருவதால்- நெற்றிக்கண் பலப்படுவதால் அமாவாசையன்று சாஸ்திரிகள் மந்திர ஜபம் ஆரம்பிக்கின்றனர்.

கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர்.

அமாவாசையன்று ஜீவசமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள், அதிஷ்டான பூஜைகளை அமாவாசையன்று நடத்துகின்றனர்.

ammavasai


சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை திதி சிறந்தது. அதில் ஒன்றுதான் பித்ரு தர்ப்பணம். நமது முன்னோர்களும் பெற்றோர்களும் இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்களுடைய ஆன்மாக்களின் ஆசிவேண்டி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாளான அமாவாசையில் புரட்டாசி மாத அமாவாசை மிகவும் சிறப்புடையது. பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். மறைந்த முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு சந்திரனின் ஒளிக்கதிரில் உள்ள அமிர்தம்தான் உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கதிர் ஆன்மாக்களுக்குக் கிடைக்காது. அதனால் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும். ஆன்மாக்கள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாத ஆன்மாக்கள் தனது ரத்த சம்பந்தமுடையவர்களின் வீடுகளுக்குச் சென்று நமது இல்லங்களில் உள்ள நீர்நிலை, வாசலில் நின்று உணவைப் படையல், தர்ப்பணம் மூலம் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

அவர்களின் பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இதனால் மூதாதையர்களின் பசியும் தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள்.

ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையான தோஷம் பித்ரு தோஷம். இந்த தோஷமுள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற எந்தப் பரிகாரங்கள் செய்தாலும் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர ஜபங்களும் சித்தியடைவதில்லை. இதற்குக் காரணம் நமது பித்ருக்களின் சாபம்தான்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புரட்டாசி அமாவாசை சிறந்த நாளாகும்.

அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று இறந்த தாய், தந்தையர், முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு, பூஜை, திதி, தர்ப்பணம் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருச்செந்தூர், வேதாரண்யம், திருவையாறு, கொடுமுடி, பவானி கூடுதுறை, தாமிரபரணி போன்ற இடங்களும் , வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பதற்குச் சிறப்பானதாகக் கருதப்படுகின்றன. இறந்தநாள், திதி தெரியாதவர்களும், மாதாந்திர அமாவாசையன்று திதி கொடுக்க முடியாதவர்களும் மகாளய அமாவாசை தினத்தில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதிப் பலன்களை நம்மிடமிருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அதனால் அன்று சூரிய வழிபாடு செய்வது மிக அவசியம்.

அமாவாசை நாட்களில் தீர்த்தக் கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின்போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி. ஆன்மாக்களுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி. நமது முன்னோர்களின் ஆன்மாக்களை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆகுதிகளை ஸ்வதா தேவிதான் ஆன்மாக்களுக்குச் சேர்ப்பிக்கிறாள்.

அமாவாசையன்று ஏழைக்குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ அன்னதானம் செய்யலாம். ஆனால் எள்ளுச் சட்னி அல்லது எள்ளுருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். இதற்கு சாதி, மதம், இனம் என்ற வேறுபாடில்லை.

அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்குப் பொருந்தாது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், மூன்று தலைமுறை முன்னோர்களின பெயர்களைச் சொல்லி தர்ப்பணம் செய்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாற்ற வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். தலைவாழையிலை படையலிட்டு வணங்க வேண்டும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துமுடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, தர்ப்பணம் செய்துமுடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

அமாவாசை நாட்களில் அசைவ உணவு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்று காகத்துக்கு சாதம் வைத்த பின்னரே நாம் உணவருந்த வேண்டும். கோதுமைத் தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்கவேண்டும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசிச் சக்கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும்போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர்லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன் கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே ‘மகாளய பட்சம்’ என்பர். ‘பட்சம்’ என்றால் 15 நாட்கள்’எனப் பொருள். மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாகக் கூடும் காலமான 15 நாளே மகாளய பட்சம். (சிலசமயங்களில் 16 ஆக மாறுபடும்).

இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இந்தப் பதினைந்து நாள்களில் பரணி மகாபரணி அன்றும் (28-9-2018), மகாவியதீபாதம் (1-10-2018), மத்யாஷ்டமி (2-10-2018), கஜச்சாயா புண்யகாலம் (6-10-2018), சஸ்தரஹதமாலயம் (7-10-2018) போன்ற நாட்களில் செய்யும் முன்னோர் வழிபாடு மிகமிக நற்பலன் தரும். இது புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.

மூன்று தலைமுறை தந்தைவழி, தாய்வழி முன்னோரையும் நினைத்துத் தீர்த்தக்கரைகளுக்குச் சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.

வீடுகளில் பெரியவர்கள் இறந்தால் அவர்களின் பெயர் மற்றும் இறந்த நாட்களை டைரியில் குறித்து, நம் தலைமுறையினருக்கு எதிர்கால திதி தர்ப்பணம், சிரார்த்தத்திற்கு உதவ வேண்டும். நமது வீடுகளில், மறைந்த பெரியவர்களின் புகைப்படங்களில் தோற்றம், மறைவு, பெயர் எழுதி வரிசையாக பல தலைமுறை போட்டோக்கள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதற்குக் காரணம் அவர்களுடைய திதி, வழிபாட்டுமுறையை மறக்கக்கூடாது என்பதே.

இந்த விளம்பி வருட புரட்டாசி மாதத்தில், மகாளய பட்சம் புரட்டாசி 9-ஆம் நாள் ஆரம்பித்து புரட்டாசி 22-ஆம் நாள் முடிவடைகிறது. ஆங்கில தேதி செப்டம்பர் 25-ஆம் நாள் ஆரம்பமாகி அக்டோபர் 8-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 9-ஆம் தேதி காலை சிறிதுநேரம் மட்டுமே அமாவாசை இருக்கிறது. இந்த விளம்பி வருடத்தில் ஒவ்வொரு திதியும் இரண்டு நாட்களாக இணைந்து வருவதால் நாள் கணக்கில் 14 நாட்கள் மட்டுமே வருகிறது.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள் பிரதமை மகாளய பட்சம் ஆரம்பம்- பணம் சேரும்.

2-ஆம் நாள் துவிதியை- ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்.

3-ஆம் நாள் திரிதியை திதி- நினைத்தது நிறைவேறும்.

4-ஆம் நாள் சதுர்த்தி மஹாபரணி- பகைவர்களிடமிருந்து தப்பிக்க முடியும்.

5-ஆம் நாள் பஞ்சமி- வீடு, நிலம் முதலான சொத்து சேர்க்கை கிடைக்கும்.

6-ஆம் நாள் சஷ்டி- புகழ் கிடைக்கும்.

7-ஆம் நாள் சப்தமி மகாவியதீபாதம்- சிறந்த பதவிகள் தேடிவரும்.

8-ஆம் நாள் அஷ்டமி மத்யாஷ்டமி- சமயோசித புத்தி, அறிவாற்றல் ஏற்படும்.

9-ஆம் நாள் நவமி- சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள், மருமகன் அமைவர். புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும்.

10-ஆம் நாள் தசமி- நீண்டநாள் ஆசை நிறைவேறும். (தாமிரபரணி மகாபுஷ்கரணி.)

11-ஆம் நாள் ஏகாதசி- படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி ஏற்படும்.

12-ஆம் நாள் துவாதசி கஜச்சாயா புண்ணிய காலம்- தங்கநகை சேரும்.

13-ஆம் நாள் திரயோதசி சஸ்த்ரஹத மகாளயம்- பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் கிடைக்கும்

14-ஆம் நாள் சதுர்த்தசி- பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை. துர்மரணம், கொடிய நோயால் இறந்தவர்களுக்கு இந்நாளில் சிறப்பு வழிபாட்டுப் பூஜைகள் உடனடி பலன் தரும்.

15-ஆம் நாள் மகாளய அமாவாசை- பிதுர் வழிபாட்டுக்கு மிகச்சிறப்பு வாய்ந்த நாளான மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர்பூஜை (8-10-2018) மற்ற எல்லா அமாவாசை நாட்களைக் காட்டிலும் அதிக பலன் தரும். ஒரு வருட திதி, தர்ப்பணம் செய்த பலன், முன்னோர் ஆசி கிடைக்கும்.

எனவே, மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் இருந்தால் புண்ணியப் பலன் நம் தலை முறைக்கு வந்துசேரும் . பித்ரு பூஜை, வழிபாடு செய்யாமல் என்னதான் கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது. ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களைச் செய்பவர்கள்தான், செய்யவேண்டிய பித்ரு கடமையில் ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையான பித்ரு பூஜை, ஜாதகத்திலுள்ள எல்லா தோஷங்களையும் சரிசெய்யும். நிச்சயம் அகன்றுவிடும்.

நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசை திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். தந்தை இல்லாதவர்கள் மட்டும் திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும். மற்றவர்கள் படையலிட்டு வழிபாடு செய்யலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் வீட்டின் அருகிலுள்ள கோவிலில் தர்ப்பணம் செய்யலாம். பெண்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை ஆத்மார்த்தமாக வழிபட்டால் பலன் கிடைக்கும்.

செல்: 98652 20406

Next Story

ஆடி அமாவாசை தர்ப்பணம்! நீர் நிலைகளில் திரண்ட மக்கள்!

Published on 11/08/2018 | Edited on 27/08/2018
thar


மரித்துப் போன மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் உலகில் ஆவி வடிவில் இருப்பார்கள். அந்த ஆவிகளின் ஆன்மாவைச் சாந்தப்படுத்துவதற்காகவே அவர்களின் உறவினர்கள், பிள்ளைகள் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து அமைதிப்படுத்துவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஐதீகம்.
 

vc


அமாவாசை நாட்களில் செய்யப்படும் இந்த பிதுர் தர்ப்பணம் தான் முக்கியம். அதுவும், தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினமே முக்கியத்துவம் பெற்றது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்காக இன்று ஆடி அமாவசை அதிகாலை முதல் மக்களின் கூட்டம் திரளுகிறது.
 

sf


குறிப்பாக தென்மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் வனப்பகுதியான சொரிமுத்து அய்யனார் கோவில் மற்றும் குற்றாலத்தின் அருவிக்கரையோரங்களிலும் அதிகாலை முதலே பிதுர் தர்ப்பணம் செய்வதற்காக மக்களின் கூட்டம் நீண்ட வரிசையிலிருக்கிறது. மலையில் தொடரும் மழைகாரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கிருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு வசதிகளை நெல்லை மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.