விஷ்ணு பாத் மந்திர்... அதாவது விஷ்ணு பாத ஆலயம்... இது பீஹாரிலிருக்கும் கயாவில் உள்ளது.ஆதிகாலத்திலிருந்தே இந்த ஆலயம் இருந்து வருகிறது. 40 சென்டிமீட்டர் அளவில் இங்கு விஷ்ணுவின் பாதம் உள்ளது. அந்த பாதம் ஒரு பாறை யின்மீது ஆழமாகப் பதிந்திருக்கிறது. அகல்யாபாய் ஹோல்கர் என்ற மகாராணி இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறாள்.இந்த ஆலயம் "பால்கு' நதியின் கரையில் அமைந் துள்ளது.விஷ்ணுவின் பாதத்தை "தர்மசிலா' என்கின்றனர்.சிலா என்றால் கல் என்று பொருள். பிராமணர்களில் ஒரு பிரிவினரான பூமிகர் அந்தணர்கள் இந்த ஆலயத்தை பழங்காலத்திலிலிருந்தே வழிபட்டு வருகிறார்கள். இப்போது ப்ரம்மகல்பித் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். இவர்களை பண்டாரங்கள் அல்லது புரோகிதர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.இங்கு ராமானுஜர், மாதவர், சைதன்யா மகாபிரபு, ராமகிருஷ்ணர் ஆகியோர் வழிபட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் கலாகர் என்ற அரக்கன் அந்த இடத் தில் பல அக்கிரமங்களைச் செய்திருக்கிறான். அவனால் இன்னல்களுக்கு ஆளான தேவர்கள், பகவான் விஷ்ணுவிடம் தங்களின் நிலைமையை முறையிட்டனர்.விஷ்ணு தன் வலது காலால் கலாகரனின் தலையில் மிதித்து பூமிக்குள் ஆழ்த்தினார்.அப்போது அவரது பாதம் பூமியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த இடத்தில் கலாகரனுக்கு மோட்சம் கிடைத்தது. அப்போது விஷ்ணு "இந்த இடத்திற்கு யார் வந்து பித்ரு தர்ப்பணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நற்கதி கிட்டும்' என்றருளினார்.அதனால் ஏராளமானவர்கள் இங்கு வந்து பித்ரு தர்ப்பணம் செய்கிறார்கள்.கயாவிலிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் "ப்ரேத் சிலா' என்ற இடம் இருக்கிறது.
அங்குதான் பித்ரு தர்ப்பணம் நடத்தப்படுகிறது.இந்த ஆலயத்திற்கு ராமனும் சீதையும் வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது. அங்கு சீதை, தசரதனுக்காக பிண்ட தானம் செய்தாளாம்.வால்மீகி ராமாயணத்தில் இந்த சம்பவம் வருகிறது. வனவாச காலத்தில், மஹாளய பட்சத்தில் தசரதனுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக ராமன், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் கயாவுக்கு வந்திருக்கின்றனர்.தர்ப்பணம் செய்ய தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக ராமனும், லட்சுமணனும் வெளியே சென்றனர். சீதை மட்டும் தனியாக இருந்திருக்கிறாள்.அப்போது மதிய வேளை. தர்ப்பணம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது! சீதைக்கு அளவற்ற பதற்றம். அப்போது தசரதனின் ஆன்மா அவளிடம், "உடனடியாக பிண்டதானம் செய்' என்றதாம். சீதைக்கோ என்ன செய்வதென்று குழப்பம்!வேறுவழியின்றி, பால்கு நதியையும், நதியின் கரையிலிருந்த ஆலமரத்தையும், அங்கு காணப்பட்ட கேத்கி மலரையும், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவையும் சாட்சிகளாக வைத்து, சீதை அங்குள்ள மண்ணை எடுத்துப் பிண்டதானம் செய்திருக்கிறாள். எல்லாம் முடிந்தபிறகு, ராமனும் லட்சுமணனும் அங்கு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவத்தைக் கேட்ட அவர்கள் "எந்த பொருட்களும் இல்லாமல், நீ எப்படி பிண்ட தானம் செய்தாய்? இதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா?' என்று கேட்டனர்.
அதற்கு சீதை நதியையும், மலரையும், பசுவையும், ஆலமரத்தையும் சாட்சிகளாக வைத்ததைக் கூறினாள்.அதைப்பற்றி ராமனும், லட்சுமணனும் விசாரிக்க முற்பட்டபோது நதியும், பசுவும், மலரும் "அப்படியொரு விஷயமே நடக்கவில்லை' என்று பொய் கூறிவிட்டன. ஆலமரம் மட்டும் "நடந்த சம்பவம் உண்மை' என்று கூறியது. சீதை தசரதனை வேண்டிக்கொள்ள, தசரதன் ஒளி வடிவத்தில் வந்து "சீதை எனக்கு தர்ப்பணம் செய்தது உண்மை' என்றாராம்.அதைத் தொடர்ந்து சீதை பொய்கூறிய மூவருக்கும் சாபமிட்டாள்.பால்கு நதியைப் பார்த்து 'நீ எப்போதும் வறண்டுபோன நிலையிலேயே இருக்க வேண்டும்' என்றும், பசுவிடம், "உன்னை அனைவருமே வழிபடுவார்கள்.
ஆனால் நீ மிச்சம் மீதியைத்தான் சாப்பிட வேண்டும்' என்றும், கேத்கி மலரைப் பார்த்து "உன்னை எந்த பூஜையிலும் யாரும் வைக்க மாட்டார்கள்' என்றும் சபித்தாளாம்.உண்மையைக் கூறிய ஆலமரத்திடம், "நீ நீண்ட ஆயுளுடன் வாழ்வாய். எல்லாருக்கும் நல்லவற்றைச் செய்வாய். அனைவருக்கும் நிழல் தருவாய். எந்தப் பெண் உன்னை வந்து வழிபடுகிறாளோ, அந்தப் பெண்ணின் கணவனுக்கு நீண்ட ஆயுள் நிச்சயம் கிடைக்கும்' என்று வரமருளினாளாம்.பிண்ட தர்ப்பணம் செய்பவர்கள் கயாவுக்கு வந்து அதைச் செய்து முடித்து விஷ்ணுவின் அருளைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு பித்ருக்களின் சாபத்திலிலிருந்து விடுதலை கிடைக்கிறது.சென்னையிலிலிருந்து கயாவிற்குச் செல்லவேண்டு மென்றால், கயா அதிவேக ரயிலில் 2,345 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவேண்டும். 39 மணி நேரப் பயணம். வாரத்திற்கு ஒருமுறை, திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது.பாட்னா விமான நிலையத்திலிருந்து 135 கிலோ மீட்டர் தூரத்தில் கயா உள்ளது.