Skip to main content

திருமணம் நடைபெறும் காலம்

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

காலம் கனிந்துவிட்டால் மணவாழ்க்கை தடையின்றி அமைந்து தாம்பத்ய வாழ்வில் இன்பத்தை உண்டாக்கும். என்னதான் முயற்சி செய்தாலும் சிலருக்கு காலம் கனியாது. ஆனால் சிலருக்கோ இளம்வயதிலேயே பல வரன்கள் தேடிவரும். காலாகாலத்தில் கால்கட்டு போட்டால் மட்டுமே மனம் பாதைமாறிப் போகாமலிருக்கும்.

குருபலம் வந்துவிட்டாலே திருமணம் நடைபெற்றுவிடும் என்ற கருத்து மக்களிடையே பொதுவாக நிலவி வருகிறது. குருபலம் என்பது கோட்சாரரீதியாக குரு ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதாகும். குருபலம் இருந்தாலும் திருமண வாழ்க்கை தகுந்த காலத்தில் அமைய கிரக நிலைகளும் சாதகமாக இருக்கவேண்டும்.

 

god



குரு வருடத்திற்கு ஒருமுறை இடப்பெயர்ச்சியாவதால், குருபலம் என்பது வருடாவருடம் மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குருபலம் சிறப்பாக இருந்தாலும், திருமணத்திற்கான வயது வந்தாலும், நல்ல வரன்களும் தேடிவந்தாலும் அவரின் தசாபுக்திக் காலப்படி எப்பொழுது திருமணம் நடைபெற வேண்டுமென்றிருக்கிறதோ அப்பொழுதுதான் நடைபெறும். திருமணம் நடைபெறுபவர்களுக்கு மட்டுமின்றி, அதை நடத்தி வைப்பவர்களுக்கும் சுபகாரியம் செய்வதற்கான காலம் வரவேண்டும். இவையனைத்தும் ஒன்றுகூடினால் மட்டுமே திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும் என்றும் சாஸ்திர விதிகள் கூறுகின்றன.

ஜாதகத்திலுள்ள 7-ஆம் அதிபதியின் தசா புக்தி, 7-ல் அமைந்திருக்கும் கிரகத்தின் தசாபுக்தி, 7-ஆம் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் சுபகிரகங்களின் தசாபுக்தி, லக்னாதிபதியின் தசாபுக்தி, சுபகிரகங்களின் தசாபுக்தி, சந்திரனுக்கு 7-ல் அமையப்பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தி, களத்திரகாரன் சுக்கிரனின் தசாபுக்தி, சுக்கிரனின் நட்சத்திரங்களாகிய பரணி, பூரம், பூராடத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தி போன்ற காலங்களில் திருமணம் நடைபெறும். மேற்கூறிய காலங்களில் கோட்சார ரீதியாக குருவும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்யுமானால் திருமணம் எளிதில் கைகூடும்.

 

god



ஒருவருக்கு என்னதான் ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 2, 7-ல் சனி, ராகு- கேது போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வையின்றி அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால் திருமணம் நடைபெற இடையூறு உண்டாகும்.

அதுபோல கேதுவின் தசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில் திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை. அப்படியே கைகூடினாலும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கேது தசை நடைபெற்றால் அந்த ஜாதகருக்கு ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கியரீதியாக உடல் அசதி, சோர்வு போன்றவை இருக்கும். தாம்பத்திய வாழ்வில் நாட்டம் குறைவாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, வரனுக்கு சுக்கிர தசையோ, ராகு தசையோ நடைபெறுமானால் அவருக்கு தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். கேது தசை நடைபெறுபவருக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தால் அவரின் தாம்பத்தியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் மணவாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவு உண்டாகும்.

கேது தசை நடைபெறுபவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதென்றால், ஒன்று கேது தசை முடிந்தபிறகு செய்துவைக்க வேண்டும். அல்லது கேதுவின் ஆதிக்கம் கொண்ட ஜாதகமாகப் பார்த்துத் திருமணம் செய்தால் மணவாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருக்கும். அதாவது கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்த வரனுக்கோ, கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசை நடப்பிலிருக்கும் வரனுக்கோ மணம் முடித்து வைத்தால் ஓரளவுக்கு இணங்கி வாழ்வார்கள்.