ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தேவையற்ற கெட்ட பழக்கங்களுக்கு பல நேரங்களில் அடிமையாகிவிடுகிறான். அதனால் அவனுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பல திறமைசாலிகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, கிடைத்த வாழ்க்கையையே வீணடித்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உடல்நலம் கெட்டுவிடுகிறது. பலர் ஈரலில் பாதிப்பு உண்டாகி, குறைந்த வயதிலேயே இறந்துவிடுகிறார்கள். பலருக்கு கைகால்களிலும் ஒரே நடுக்கம். பலர் அளவுக்குமேல் கோப குணத்திற்கு ஆளாகி, கொலைகாரர்களாகக்கூட ஆகிவிடுகிறார்கள். அவர்களுடைய குடும்ப வாழ்க்கையே துயரங்கள் நிறைந்ததாகிவிடுகிறது. கணவனும் மனைவியும் விவாகரத்து செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைகூட உண்டாகிவிடுகிறது. மதுப்பழக்கம் எந்த அளவுக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையையே அழித்துவிடுகிறது என்பதை நாம் பலரின் வாழ்க்கையிலும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இதற்கெல்லாம் காரணம்- ஜாதகத்திலிருக்கும் கிரகங்களின் சேர்க்கைதான்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்ந்து லக்னத்திலிருக்க, அந்த ஜாதகத்தில் 6-ல் பாவ கிரகம் இருந்தால், அவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மது அருந்துவார். லக்னத்தில் சூரியன், சனி, சுக்கிரன் இருந்தால், அந்த மனிதர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவார். விரய ஸ்தானத்தில் சூரியன், ராகு, செவ்வாய் அல்லது சுக்கிரன், ராகு, செவ்வாய் அல்லது சனி, சூரியன், ராகு இருந்தால் அந்த ஜாதகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதே ஜாதகத்தில் லக்னாதிபதி பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது 2-க்கு அதிபதி 6-ஆம் அதிபதியுடன் லக்னத்தில் இருந்தால் அவர் மதுவுக்கு அடிமையானவராக இருப்பார். 10-க்கு அதிபதி 6-ல் லக்னாதிபதியுடன் இருந்தால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவார்.லக்னத்தில் சூரியன், கேது அல்லது சூரியன், ராகு, 7-ல் சனி இருந்தால் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். அத்துடன் சூதாடுபவராகவும் இருப்பார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உச்சமாக இருந்து, அந்த சந்திரனுக்கு ராகுவின் பார்வை இருந்தால், அதே ஜாதகத்தில் சூரியனை சனி பார்த்தால், அந்த ஜாதகர் ரகசியமாக மதுப்பழக்கம் உள்ளவராக இருப்பார்.
செவ்வாய், சனி, ராகு லக்னத்தில் அல்லது 8-ல் இருந்தால், ஜாதகர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். ஜாதகத்தில் லக்னத்தில் புதன் இருந்து, அந்த புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ அல்லது விரய ஸ்தானாதிபதி நட்சத்திரத்திலோ இருந்தால், அவர் குடிப்பழக்கம் கொண்டவராக இருப்பார். ஒரு ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 6-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார். ஒரு மனிதரின் வீட்டின் தென்கிழக்கில் வாசல் இருந்து, வடகிழக்கில் சமையலறை இருந்தால் அவர் குடிகாரராக இருப்பார். அதே வீட்டில் அவரின் படுக்கையறை வடமேற்கில் இருந்து, அந்த அறைக்கு தென்கிழக்கு வாசல் இருந்து, அதில் அவர் மேற்கில் தலைவைத்துப் படுத்தால் அவர் முழு குடிகாரராக இருப்பார்.
ஒரு வீட்டிற்கு வடக்கு திசையில் வடகிழக்கில் வாசல் இருந்து, அந்த வீட்டிற்கு மத்தியப்பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அந்த வீட்டின் படுக்கையறை தென்கிழக்கில் இருந்தால், அவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். ஒரு வீட்டிற்கு வடக்கு திசையில் வடமேற்கில் வாசல் இருந்தால், அந்த வீட்டின் தென்கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ படுக்கையறை இருந்தால், அவர் குடிகாரராக இருப்பார். அந்த பழக்கத்தால் தன் சொத்துகளைக்கூட அவர் இழப்பார்.
பரிகாரங்கள்
மனதைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் கிழக்குதிசை நோக்கி அமர்ந்து சிவபெருமானின் திருநாமத்தைக் கூறவேண்டும். சூரியன் உதயமான பிறகு, சூரியனுக்கு நீர் வார்க்க வேண்டும். தன் முன்னோர்களை வணங்குதல் சிறப்பானது. தெற்குதிசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும். கருப்பு, அடர்த்தியான ப்ரவுன், அடர்த்தியான நீலம் போன்ற வண்ணமுடைய ஆடைகளைத் தவிர்க்கவும். வீட்டில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் தூபம், தீபம் ஏற்ற வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும்போது, நீருடன் சிறிது கற்பூரம், கோமியம் ஆகியவற்றையும் கலந்து சுத்தம் செய்யவேண்டும். படுக்கையறையில் அடர்த்தியான பச்சை, நீலம், ப்ரவுன் ஆகிய வண்ணங்கள் இருக்கக் கூடாது. தினமும் சிவாலயம் சென்று, சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். வீட்டில் ஸ்படிக லிங்கம் இருந்தால் அதற்கு தினமும் பூஜை செய்வது நற்பலன் தரும். மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், ஒரு மனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வு வாழலாம்.