ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் ஜோதிட நம்பிக்கை குறைவதற்கான காரணம் குறித்து ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
300 வருடங்களாக இருக்கும் நவீன விஞ்ஞானத்தின் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்து வரும் ஜோதிடத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஜோதிடம் நவீனப்படுத்தாமல் இருப்பதுதான். வராகமிகிரர் மற்றும் பராசரர் காலத்தில் எழுதப்பட்டதை மறுபரிசீலனை செய்ய ஜோதிடர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றனர். வராகமிகிரர் காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு நாளைக்கு ஒரு குழந்தை மட்டும்தான் பிறந்தது. ஆனால் இப்போது ஒரு கிராமத்தில் ஜன நேரத்தில் பத்து குழந்தைகள் பிறக்கிறது. அதனால் ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நுட்பமான எல்லைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணிகள் ஜோதிடர்களுக்கு இருக்கிறது. இப்போது ராசி கட்டத்தையும் நவாம்ச கட்டடத்தையும் மட்டுமே வைத்துக்கொண்டு பலன் சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள்.
ராசி கட்டத்தில் 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் நகராது. நவாம்ச கட்டத்தில் 12 நிமிடத்திற்கு ஒரு நவாம்ச கட்டம் நகராமல் இருக்கும். அப்படியென்றால் 12 நிமிடத்திற்கு பிறகு பிறக்கக்கூடிய எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியான ராசி மற்றும் நவாம்ச கட்டங்கள் இருக்கிறது. இப்படி பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஒரே பலன் எப்படி இருக்கும்? ஒரு நிமிட தாமதத்தில் பிறக்கக்கூடிய இரட்டை குழந்தைகளுக்கே பலன் வெவ்வேறாக இருக்கும்போது, ஜோதிடர்களால் 12 நிமிடம் வித்தியாசப்படாத ஒரு ஜாதகத்தைக் கொண்டு எப்படி ஆராய்ச்சி செய்ய முடியும். இதனால்தான் ஜோதிடர்கள் பொதுவான பலன்களைச் சொல்லி பலரை திருப்தியில்லாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றனர். ஜோதிடர்கள் இன்று குரு, சனி, செவ்வாய் ஆகியவை எங்கு இருக்கிறார்கள் என்பதை வைத்துக்கொண்டு பலன் சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்லும் பலன்களால் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். வெறும் அடையாளங்களை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்லக்கூடாது. மருத்துவர்களிடம் போனால் உடனடியாக நோயைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். அதற்கு எக்ஸ் ரே, ஸ்கேன், இரத்த சோதனை என பல பரிசோதனைகளை செய்த பின்பு ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் ஜோதிடத்தில் வெறும் 15 நிமிடத்தில் ராசியையும் நவாம்சத்தையும் பார்த்து பலனை முடிவு செய்கின்றனர்.
ஜாதகத்தில் நுட்பமான பரிசோதனை செய்தால் அதற்கேற்ப பலன்கள் மாறும். 16 அம்சங்களில் நாடி அம்சத்தில் மட்டும் ஒரு ராசி கட்டத்தை 150 பாகமாகப் பிரிக்கலாம். அதில் 20 நிமிடத்திற்கு ஒரு பலன் கிடைக்கும். அது துல்லியமானதாக இருக்கும். பாகை, கலை, விகிலை என்ற இந்த மூன்றையும் எடுத்து பார்த்தால்தான் குரு எங்கு இருக்கிறார்? நவாம்ச கட்டம் எப்படி அமைகிறது? பாகம் எங்கு அமைகிறது? எந்த பாகத்தில் யாருக்குப் பலன்? என்று கண்டறிய முடியும். இதற்கு முக்கியமாகப் பாகை கணக்கு வேண்டும். துல்லியமான கணிதம் இருக்கின்ற சாஸ்திரத்தில் பொதுவான பலன்களை சொல்வதால் ஜோதிடம் மதிப்பு இழந்துவிடும். ஒரு ஜாதகத்தை எல்லாவித பாகங்களையும் பிரித்து அணுகவேண்டுமென்றால், ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு இரண்டு நாட்களாவது ஆகும். திருமணத்திற்கு நட்சத்திர பொருத்தம் மட்டும்தான் பார்க்கிறார்கள். திரிசாம்ச பொருத்தம் பார்ப்பதில்லை. திரிசாம்சத்தை பார்ப்பது மூலம் மணமகன் மற்றும் மணப்பெண்ணின் குணாதிசயங்களைச் சொல்ல முடியும். திரிசாம்ச பொருத்தம் பார்க்காமல் நட்சத்திர பொருத்தும் மட்டும் பார்ப்பதால் இன்றைக்கு நீதிமன்றத்தில் அதிகமான விவாகரத்து வழக்குகள் இருக்கிறது. நட்சத்திர பொருத்தும் மட்டும் பார்க்கும் ஜோதிடர்கள் தம்பதிகளின் வாழ்க்கைகளை கெடுத்துவிடுகின்றனர். இதையெல்லாம் மாற்றிக்கொண்டால் ஜோதிடம் கண்டிப்பாக புத்துயிர் பெறும். கட்டாயமாக ஜோதிடர்கள் வரும் காலத்தில் நுணுக்கமாக ஜாதகங்களைப் பார்த்து பலன் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்றார்.