இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் கதிர் மார்க்கஸ். இவருக்குத் தொழிலாளி ஒருவர் நண்பராக இருந்திருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி கதிர் மார்க்கஸை, அவரது நண்பர் மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். மார்க்கஸும் தனது நண்பர் அழைத்ததால் மது அருந்தவும் சென்றிருக்கிறார்.
இதையடுத்து, இருவரும் தெற்கு சுலவேசியின் கரையோர பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, அவரது நண்பர் “கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா? என்று மார்க்கஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே இது குறித்த விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஒருகட்டத்தில் விவாதம் முற்றி வாக்குவாதமாக மாற, ‘நான் இங்கிருந்து கிளம்புகிறேன்..’ என்று மார்க்கஸ் சொல்ல, ஆத்திரமடைந்த அவரது நண்பர் கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மார்க்கஸ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மார்க்கஸின் நண்பரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. கோழி முதலில் வந்ததா? அல்லது முட்டை முதலில் வந்ததா? என்ற வாக்குவாதத்தில் நண்பனையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.