இலங்கை வடக்கு மாகாணத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று உலகம் முழுவதும் இலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கிறது. இதை நம்பி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அங்கு போனவுடன்தான் எதார்த்த நிலை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த ஒரு குடும்பம் இலங்கை திரும்பியது. அங்கு சென்றவுடன், அவர்களுக்கு எச்ஐவி, டி.பி., மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தப்பட்டது. அப்படி சோதனை நடத்தப்பட்டு மாதங்கள் ஆகியும் அவர்களுடைய குடியுரிமை உறுதிசெய்யப்படவில்லை என்று புலம்பித் தவிக்கிறார்கள்.
12 ஆண்டுகள் குடியிருந்த தமிழகத்தை விட்டு போகும்போது, பக்கத்து வீடுகளில் குடியிருந்தவர்கள், அவர்களை இலங்கைக்கு ஏன் போகிறீர்கள் என்று அன்பாக தடுக்க முனைந்தார்கள். ஆனால், சொந்த நகரமான யாழ்ப்பாணத்துக்கு போன பிறகு, பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் தமிழர்கள்கூட பேச பயப்படுகிறார்கள். குறைந்தபட்சம் புன்னகைக்கக்கூட மறுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்.
கொழும்பு நகரில் கூட இரவு முழுவதும் போக்குவரத்து இருக்கிறது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இரவு 7 மணி ஆவதற்கு முன்னரே மயான அமைதி குடிகொண்டுவிடுகிறது. யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதால்தான் மக்கள் வீடுகளில் அடைந்து கொள்கிறார்கள்.
தமிழகத்திலேயே இருக்கலாம் என்றுதான் அந்தக் குடும்பத்தினர் நினைத்திருந்தார்கள். ஆனால், 12 ஆண்டுகளாக தங்களுடைய அடையாளத்தை இழந்து, ஒரு வேலைக்கு போக முடியாமல், தங்குவதற்கு வீடுகட்ட முடியாமல், போலீஸ் அழைக்கும்போதெல்லாம் ஆஜராக வேண்டிய அவலத்தில் எத்தனை காலம்தான் இருக்க முடியும் என்று வேதனையில் அழுந்தினார்கள். தமிழகத்திலிருந்து வெளிநாடு போக வேண்டும் என்றாலும் திருட்டுத்தனமாகத்தான் போக வேண்டும். அப்படி போய் மாட்டிக்கொண்டு அவமானப்பட வேண்டுமா என்ற தயக்கத்தில் கிடைத்த வேலையை செய்துகொண்டு பிழைப்பை ஓட்டினார்கள்.
இந்நிலையில்தான் வேறு வழியே இல்லாமல் இலங்கைக்கு திரும்பி அந்த நாட்டு குடியுரிமையோடு வெளிநாடு போகலாம் என்று நினைத்தார்கள். அதுவும் எளிதான காரியமாகவில்லை. யாழ்நகரில் நிலவும் இந்த கொடூரமான அமைதியைத்தான் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக வடக்கு மாகாண மீடியாக்கள் பரப்புகின்றன.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதுகூட யாழ்ப்பாணத்தில் இரவு முழுக்க நடமாட்டம் இருந்தது. ஆனால், வடக்கு மாகாணத்திற்கென தமிழர்களின் சொந்த ஆட்சி இருந்தும், மக்கள் நடமாட பயப்படுவதை வெளியுலகுக்குச் சொல்ல மீடியாக்கள் பயப்படுவது அங்கு சென்ற பிறகே அந்தக் குடும்பத்துக்கு தெரியவந்தது.
பாவம், தமிழகத்தில் அவர்கள் அனுபவித்த சுதந்திரம்கூட சொந்த மண்ணில் கிடைக்காமல் உள்ளுக்குள் புழுங்குகிறார்கள்.