கரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய சாதனை எனச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், இதன் பாதிப்பிலிருந்து சீனா மீண்டு வைத்துள்ளது. உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலுக்குச் சீனாவைக் குற்றம்சாட்டினாலும், சீனா அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத இந்தச் சூழலில், கரோனா வைரஸுக்கு எதிராகத் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீன கம்னியூஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சந்திப்பில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், தற்போதைக்கு கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து சீனா விடுபட்டிருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் தளர்த்தப்படக்கூடாது என்றும், ரஷ்ய- சீன எல்லையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள சூழலில், அங்கிருந்து சீனா வரும் நபர்கள் சிலருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஜி ஜின்பிங் இந்த உத்தரவை மேற்கொண்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், கரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய சாதனை எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பொருளாதார ரீதியாக இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், 28 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.