குரங்கு அம்மை நோயின் பெயரை மாற்ற பரிசீலித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் அண்மையில் புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட வகை வைரஸ் தாக்குவதால் ஏற்படும் நோயை 'குரங்கு அம்மை' வைரஸ் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு மற்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது. குரங்கின் பெயரை பயன்படுத்துவது அவதூறு மற்றும் இன ரீதியான குறிப்பு. இதற்கு முன் இந்த நோய் காங்கோ பேசின் என அழைக்கப்பட்டது. இனி இந்த வைரஸ் தாக்குதலை க்லேட் 1, க்லேட் 2 என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு இவ்வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.