அணு சக்தி சோதனை நடத்தவும், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தவும் வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை மீறி சோதனை நடத்துவதற்காக அந்தநாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகொரியா அண்மைக்காலமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தச்சூழலில் சுயாதீன தடைகள் கண்காணிப்பாளர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வடகொரியா மீதான தடைகளுக்கான குழுவிடம் தங்களது ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
அணுசக்தி சோதனைகள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், வடகொரியா அணுக்கரு பிளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதன் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டுள்ளது. அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பை வடகொரியா தொடர்ந்து பராமரித்து மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கான பொருட்கள், தொழில்நுட்பம், வெளிநாடுகளில் இருக்கும் இந்தத் திட்டங்களுக்கான அறிவு ஆகியவற்றை இணைய வழிகள் மற்றும் கூட்டு அறிவியல் ஆராய்ச்சி மூலம் வடகொரியா தொடர்ந்து தேடி வருகிறது. சைபர் தாக்குதல்கள் குறிப்பாக கிரிப்டோ சொத்துக்கள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள், வடகொரியாவின் வருமானத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
2020 முதல் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து குறைந்தது மூன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலிருந்து வடகொரியா சைபராக்டர்கள் (cyberactors) 50 மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை திருடியுள்ளனர் என உறுப்பு நாடுகளில் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு சுயாதீன தடைகள் கண்காணிப்பாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.