கரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பின் விசாரணைக் குழு அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி இன்று லட்சக்கணக்கான மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ். இந்நிலையில் இந்த வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவைக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 62 நாடுகள் ஒன்றிணைந்து, இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தும், இந்த வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்தும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தன. இந்த முடிவுக்குப் பெருவாரியான உலக நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இதுகுறித்து சீனாவுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளக் குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சீனா செல்லும் இந்தக் குழுவினர், கரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது, எப்படி மனிதர்களுக்குப் பரவியது என்பன குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.