2019 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பரவல் காரணமாக உலகில் பல நாடுகளில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள், குறிப்பாக, அடித்தட்டு மக்கள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கினர். அதேபோல் கோடிக்கணக்கில் உயிரிழப்புகளும் இருந்தன.
முதல் அலை, இரண்டாம் அலை என தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் மீண்டு வரலாம் என தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று என்பது சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதல் என சீனாவின் யூகானை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யூகான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி' ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சபோ சபோ என்பவர் சர்வதேச செய்தியாளர் சங்க உறுப்பினர் ஜெனிபர் என்பவருக்கு கொடுத்த பேட்டியில், “கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம். கொரோனா தொடங்கிய 2019 ஆம் ஆண்டில் மேலதிகாரி ஒருவர் கொரோனா வைரசின் நான்கு பிரிவுகளை எனது நண்பர்களிடம் கொடுத்து இதில் எது அனைத்து உயிரினங்களிலும் எளிதாகப் பரவக்கூடியது எனக் கண்டறியச் சொன்னார்.
2019 ஆம் ஆண்டு சீனாவில் ராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த பல்வேறு நாடுகளின் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர்கள் அனுப்பப்படவில்லை. வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தான் அனுப்பப்பட்டனர். கொரோனா வைரஸை பல்வேறு நாடுகளில் கொண்டு சேர்ப்பதற்கும், உலகம் முழுவதும் இந்த வைரஸை பரப்புவதற்கும் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம்'' என்று கூறியுள்ளார். சீன வைரஸ் ஆராய்ச்சியாளரின் இந்த கருத்து தற்போது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.