உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவிற்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில நாடுகள், ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் ஏற்பட்ட எதிர்ப்புச் சக்தி, காலப் போக்கில் குறைந்துவிடும் எனக் கூறி தங்கள் நாட்டு மக்களுக்கு பூஸ்டர் ஷாட் என மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றன.
ஆனால் இதற்கு உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. பூஸ்டர் ஷாட்கள் தேவை எனத் தரவுகள் குறிக்கவில்லை என்றும், வருமானம் அதிகமுள்ள நாடுகள் பூஸ்டர் டோஸ்களை செலுத்துவதால் வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி கிடைக்காமல் போய்விடும் என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
இந்தநிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு குறித்த நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு பூஸ்டர் ஷாட்களை செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இரண்டு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டாலும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.