கரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப்போயுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று ஏற்படுத்திய உயிர்பலியைப் போலவே, இதனால் ஏற்பட்ட மறைமுக விளைவுகளும் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. பொருளாதாரம், மனநிலை என பல்வேறுபட்ட பிரச்சனைகளை மக்கள் மத்தியில் விதைத்திருக்கிறது இந்த கரோனா. இந்நிலையில், கரோனாவால் நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பிற நோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு சில நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதோனம், "நமக்கு முன்னால் நீண்ட தொலைவிலான பாதை தெரிகிறது, இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது, இன்னும் பெருந்தொற்றின் தாக்கம் ஓயவில்லை. அதேநேரம், பிற நோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு 21 நாடுகளில் தட்டுப்பாடு என்ற செய்திகள் கவலையளிக்கின்றன. இதற்கான காரணம் கரோனாவினால் எல்லைகள் மூடப்பட்டிருப்பதே. சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் இதனால் மலேரியா காய்ச்சல் நோய்கள் இரட்டிப்படையும் அபாயம் உள்ளது, ஆனால் நாங்கள் சில நாடுகளுடன் சேர்ந்து அந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க பாடுபட்டு வருகிறோம்” என்றார்.