பிரபல தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், தனது தனியுரிமை கொள்கைகளிலும், சேவைக்கான விதிமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வாட்ஸ்அப், ஆப்-இன் நோட்டிபிகேஷனாக பயனாளர்களுக்குத் தெரிவித்து வருகிறது. இதில் முக்கியமாக ஃபேஸ்புக் செயலியோடு தகவல் பரிமாற்றம் செய்வது குறித்த கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் முக்கியமானது.
இந்த மாற்றத்தின் மூலம், ஃபேஸ்புக் செயலியோடு, வாட்ஸ்அப்பின் தகவல்கள் அனைத்தும் பகிர்ந்துகொள்ளப்படும். நமது தொலைப்பேசி எண், அதன் ஐ.பி. முகவரிமுதல் நாம் மற்றவரோடு தொடர்புகொள்ளும் விதம் உள்ளிட்ட அனைத்தும் ஃபேஸ்புக்கோடு பகிர்ந்துகொள்ளப்படும். பயனாளர்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள், இதுபோன்ற புதிய தனியுரிமை கொள்கைகளையும், விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்அப்பின் இந்த அறிவிப்புக்கு, இது ஒரு நபரின் தனியுரிமைக்கு எதிரான செயல் என்று உலகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.