இலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் தொடர் மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமீபத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே போடப்பட்ட காம்காசா ஒப்பந்தத்தைப் பற்றியும் அதன் தாக்கம் இந்தியாவில் எத்தகையது என்பதைப் பற்றியும் விவரித்தார்.
”நான் சிறையில் இருந்தபோது இரண்டு மாதத்திற்கு முன், அமெரிக்காவுடன் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தமான காம்காசா ஒப்பந்தத்தை இந்தியா போடுகிறது. ஆனால் அதை எதிர்த்து எந்தவிதமான குரல்களும் இந்திய அரசியலில் பதிவு செய்யப்படவில்லை. அந்த ஒப்பந்தத்தின் சாரம் என்னவென்றால், இந்தியாவின் ராணுவ தளத்தை முழுவதையும் அமெரிக்கா பயன்படுத்தலாம் என்பதுதான். இது சீனாவுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்தக் கூடிய அளவிற்கு செல்லும். இதில் இந்திய மக்கள்தான் அடிபடப் போகிறார்கள், அதிலும் குறிப்பாக எல்லையோர மாநிலத்தில் இருக்குக்கூடிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படப் போகிறார்கள். அதில்தான் தமிழ்நாடும் இருக்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவின் நெருக்கடியும் வருவதனால், அவர்களுடன் ஆயுத ஒப்பந்தத்தை போடுகிறார்கள். இது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியை தொடர்ந்து எதிர்க்கக்கூடிய காங்கிரஸ் என்றாவது காம்காசா ஒப்பந்தத்தை எதிர்த்து பேசி இருக்கிறதா என்றால் இல்லை.
இந்த நேரத்தில்தான் ராணுவ தளவாட உற்பத்தியை இந்திய அரசாங்கம் அம்பானி, டாட்டா மற்றும் மஹிந்திரா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுக்கிறது. தனியார் நிறுவனங்கள் லாபத்திற்காகதான் ஒரு பொருளை உற்பத்திசெயும். தொடர்ச்சியாக ஒரு பொருள் விற்க வேண்டுமென்றால் அதற்கான தேவை மீண்டும் மீண்டும் ஏற்பட வேண்டும். ராணுவ தளவாட பொருட்களை விற்க வேண்டும் என்றால், போர் நடக்க வேண்டும். அப்படித்தான் இப்போது மேற்காசியாவில் யுத்தங்கள் நடக்கின்றது, அதேபோல் இங்கேயும் நடக்கும். ஆனால் இதைப் பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை.”