ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது இடைக்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், சர்வதேசமும் நிதியமும் ஆப்கானுக்கு வழங்கிய வந்த நிதியுதவியை நிறுத்தியதே இதற்கு காரணமாகும். இந்தநிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் ஆப்கான் மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
அதேபோல் சீனா, 30 மில்லியன் டாலர் மதிப்பிலான அவசர மனிதாபிமான உதவியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் தற்போது அமெரிக்காவும் மனிதாபிமான உதவிகளுக்காக ஆப்கானிஸ்தானுக்கு 144 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.நா. உயர் ஆணையம், யுனிசெப், இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சுதந்திரமான மனிதாபிமான அமைப்புகள் மூலம் இந்த தொகை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
144 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 1078 கோடியாகும். இந்த நிதியுதவி ஆப்கான் மக்களுக்கே பயனளிக்கும் என்றும், தலிபான்களுக்கு பயனளிக்காது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.