Skip to main content

“லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைப்பிடிக்க முயற்சி எடுத்து வருகிறேன்” - சபாநாயகர் அப்பாவு

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Trying to adhere to Latimer House Principles says Speaker Appavu

 

கானா நாட்டின் தலைநகர் அக்ரா நகரத்தில் நேற்று 4.10.2023  நடைபெற்ற 66 ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாகத் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார்.

 

இந்த கருத்தரங்கில் அப்பாவு பேசுகையில், “2003 ஆம் ஆண்டு சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதிகாரப் பகிர்வுகள் மற்றும் ஊடுருவல்கள் குறித்து லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து, பல காமன்வெல்த் நாடுகளில் அதிகாரப் பகிர்வுகளை உறுதிப்படுத்துவதிலும், நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கருதுகிறேன். இருந்தபோதிலும், காமன்வெல்த் நாடுகள் பலவற்றிலும் இக்கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதில், பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் நீடிக்கின்றன. மேலும், இந்த கோட்பாடுகள் காமன்வெல்த் நாடுகளில் ஜனநாயக வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தைத் தொடர்ந்து வழிநடத்துவதை உறுதி செய்யத் தொடர்ந்து முயற்சிகள் தேவை. ஒவ்வொரு உறுப்பு நாடுகளிலும் குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பரவலாக வேறுபடலாம். மேலும், 2023-ல் இந்த கோட்பாடுகளின் நிலை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

 

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று செம்மையாக ஆட்சி செய்து, தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில், திறமையான நிர்வாகத்தை வழங்கி, தமிழக முன்னேற்றத்திற்கான வளர்ச்சிப் பணிகளை நாள்தோறும் வழங்கிவரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆட்சிக் காலத்தில், தமிழக சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். மேலும், சட்டமன்றம், நீதிமன்றம் நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் கி. சீனிவாசனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்