அமெரிக்காவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஒருபோதும் வைத்துக்கொள்ள முடியாது என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சில தினங்களுக்கு முன்னர், இருநாட்டு எல்லையில் உள்ள பன்முன்ஜோம் என்ற கிராமத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த பதற்றத்தைப் போக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பில், வடகொரியா தனது அணுஆயுத சோதனைக்கூடங்களை மூடுவதாகக் கூறி, அணு ஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டது.
இந்நிலையில், மீண்டும் பன்முன்ஜோம் பகுதியில் இருநாட்டு சந்திப்பு நடத்தப்பட இருந்தது. அதில், முந்தைய சந்திப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை பிரகடனப்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அமெரிக்க படையினருடன் சேர்ந்து அந்நாட்டு படைவீரர்கள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதை செய்தியை அறிந்து ஆத்திரமடைந்த வடகொரியா, சந்திப்பை ரத்துசெய்தது.
இதுகுறித்து வடகொரியா அரசு ஊடகத்தில், அணு ஆயுதங்களைக் கைவிடுவதன் மூலம் அமெரிக்காவுடன் பொருளாதார, வர்த்தக உறவில் ஈடுபடுவோம் என யாரும் எண்ணிவிடக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. முன்னதாக, அணு ஆயுதங்களைக் கைவிட்டால் வடகொரியாவை செல்வச் செழிப்புமிக்க நாடாக கட்டமைக்க அமெரிக்கா உதவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், வரும் 12ஆம் தேதி ட்ரம்ப் மற்றும் கிம் சந்திக்கவுள்ள நிலையில், வடகொரியாவின் இந்த அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.