கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனப் பெண் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலவைகளை கொண்டு சிகிச்சையளித்ததில், அவரின் உடல்நிலை நன்கு முன்னேறியிருப்பதாக தாய்லாந்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில் 350 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் சீனாவை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தாய்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலவைகளை கொண்டு சிகிச்சையளித்ததில் அவரது உடல்நலம் நன்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகியவற்றுடன் காய்ச்சல் எதிர்ப்பு மருந்து ஓசெல்டமிவிரை மருத்துவர்கள் இணைத்து இந்த சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக 12 மணிநேரத்தில் அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மருத்துவர்களின் இந்த சாதனை உலகம் முழுவதும் மக்களிடையே ஒரு சிறிய நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.