Skip to main content

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்!

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
Tensions in the Middle East for Israel against on Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. 

அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீதும் தொடர் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதலையும் தீவிரப்படுத்தியே வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி (31.07.2024) ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பதவியேற்றுக்கொண்டார். இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.  

இந்த நிலையில், ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கெனவே, இஸ்ரேல் மீது 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

இதற்கிடையே, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, “மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கவனித்து வருகிறோம்” என்று கூறினார். இதனிடையே, ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்