Skip to main content

குறைந்த எரிபொருள்... செயலிழந்த பாகங்கள்... 370 உயிர்கள்... என்ன நடந்தது?

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

அரசுத்துறை விமானசேவை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த சில மாதங்களாகவே தனியார் துறையாகிவிடுமோ என்ற நிலையில் உள்ளது. கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்கா, நியூயார்க் விமான நிலையமான 'ஜான் எஃப் கென்னடி' விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்றை தரையிறக்க முயற்சிக்கும்போது  பல சவால்களை சமாளித்து 370 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, விமான கேப்டன்களான பாலியா, சுசாந்த் சிங், டி.எஸ். பாட்டியா மற்றும் விகாஸ் ஆகியோரின் திறமையான செயலால் பாதுகாப்பாக அருகில் உள்ள நியூவெர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சமபவத்தின்போது நடந்த உரையாடலையும்  விமானிகள் எதிர்கொண்ட சவாலையும் சொல்லும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.

 

Air India

 

டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடியாக 15 மணிநேரம் தொடர்ந்து பயணிக்கக்கூடிய 'ஏஐ 101' விமானம் கடந்தவாரம் 11-ஆம் தேதி நியூயார்க் நகரத்தை சென்றடைந்தது. தரையிறங்க தயாராகும் நேரத்தில், முதலில் விமானத்தை தரையிறக்கும் தானியங்கி செயல்படாமல் போனது. அதை கவனித்த விமானிகள் உடனடியாக நியூயார்க்கின் விமான நிலைய, விமான போக்குவரது கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிலைமையை அறிவித்தனர். 

 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமான நிலைய அதிகாரிகள், கவலையுடன் 'விமானத்தில் எத்தனை உயிர்கள்  இருக்கின்றன?' என்று கேட்கின்றனர். விமானத்தில் 370 பயணிகள் என்று சொல்ல பதற்றமடைந்த அதிகாரிகள் எரிபொருளின் அளவை கேட்கிறார்கள். 7,200 கிலோ எரிபொருள் இருப்பதாக ஏர் இந்தியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இங்கு வானிலை மோசமாக உள்ளதால் இந்த சூழ்நிலையில் விமானத்தை தரையிறக்குவது கடினமான விஷயம், அதனால் அருகில் உள்ள நியூவெர்க் விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வருகிறது. இப்படியே அரை மணிநேரமாக விமானம் தரையிறங்காமல் இருக்க, உள்ளே இருந்த பயணிகள் பதற்றமடைகிறார்கள். அவர்களையும் அமைதிப்படுத்தி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் சவாலை எதிர்கொள்கிறார்கள் விமானிகள். எரிபொருளின் அளவும் தொடர்ந்து சரிந்துகொண்டே வர, அதன் பின் விமானத்தின் சில முக்கிய எந்திரங்களும் பழுது அடைய துவங்கியுள்ளது. வேறு வழியின்றி எப்படியும் உள்ளிருக்கும் 370 பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று விமானிகள் (மேனுவல் முறை) என்னும் கடினமான பழைய முறையில் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கி தங்களை நம்பிப் பயணித்த 370 பயணிகளையும் பாதுகாப்பாக நியூஜெர்சியில் உள்ள நியூ ஆர்க்  விமான நிலையத்தில் தரையிறக்கினர். 

 

குறைந்த எரிபொருள், பழுதான எந்திரங்கள், மோசமான வானிலை, பதற்றமான சூழ்நிலை... இவையனைத்தையும் எதிர்கொண்டு பயணிகளை பத்திரமாக இறக்கிய விமானிகளை அனைவரும் பாராட்டுகின்றனர். இந்தத் திடீர் கோளாறு ஏற்பட என்ன காரணமென்பதை விசாரித்து சரிசெய்ய வேண்டுமென்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. நஷ்டத்தில் இயங்குவதால், தமிழக அரசு பேருந்துகள் எப்படியிருக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அது போல, நஷ்டத்தைக் காரணமாக வைத்து விமானங்கள்  அப்படியாகிவிடக்கூடாதல்லவா...  

 

சார்ந்த செய்திகள்