ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால அரசை நிறுவி, ஆட்சியை நடத்த தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவான ஐஎஸ்-கோராசன் அமைப்பு தலைவலியாக உருவெடுத்துள்ளது.
ஐஎஸ்-கோராசன் அமைப்பினருக்கும், தலிபான்களுக்கும் நீண்டகாலமாக மோதல் நடைபெற்றுவந்தாலும், ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஐஎஸ்-கோராசன் அமைப்பு தங்கள் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஐஎஸ்-கோராசன் அமைப்பு காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் 18 மற்றும் 19 தேதிகளில், தலிபான்களைக் குறிவைத்து நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில் ஐஎஸ்-கோராசன் அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட தலிபான்கள் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் எனவும் ஐஎஸ்-கோராசன் அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், ஐஎஸ்-கோராசன் அமைப்பினரை ஆப்கானிஸ்தானை விட்டு அகற்ற ஆபரேஷன் ஒன்றை தலிபான்கள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தலிபான்களுக்கும் ஐஎஸ்-கோராசன் அமைப்பினருக்கும் கடும் மோதல் நடைபெறலாம் என கருதப்படுகிறது.