சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் மத்திய வங்கி, சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு நபர்கள் சேமித்து வைத்துள்ள தொகைகளை கொண்ட பட்டியலை நாடுகள் வாரியாக வெளியிட்டது. இதில் இந்தியர்கள் ரூபாய் 6,757 கோடி சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைத்துள்ளதாக சுவிஸ் மத்திய வங்கி தெரிவித்தது. அதே போல் கடந்த ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு தொகை குறைந்துள்ளதாகவும் தெரிவித்ததுள்ளது. இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் அதிக பணத்தை சேமித்து வைத்துள்ள நாடுகளின் வரிசை பட்டியல் வெளியானது.
இந்த பட்டியலில் பிரிட்டன் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மேற்கு இந்திய தீவு, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதனைத் தொடர்ந்து சீனா 22-வது இடத்திலும், ரஷ்யா 20-வது இடத்திலும், அரபு எமிரேட்ஸ் 12-வது இடத்திலும், சவூதி அரேபிய 21-வது இடத்திலும், இலங்கை 141-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 13-வது இடத்திலும், ஜப்பான் 16-வது இடத்திலும், இத்தாலி 15-வது இடத்திலும், பாகிஸ்தான் 82-வது இடத்திலும், வங்கதேசம் 89-வது இடத்திலும் உள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா இந்த பட்டியலில் 74- வது இடத்தில் உள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் தங்களது பணத்தை சேமித்து வைக்கும் மோகம் இந்தியர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவானது கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சரிவை சந்தித்துள்ளது. 88- வது இடத்தில் இருந்துவந்த இந்தியா கடந்த ஆண்டு 73- வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது அதிலிருந்து ஓரிடம் பின் தங்கி 74- வது இடத்தைப் பிடித்துள்ளது. சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள பட்டியலைப் பார்த்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.