மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான அஸ்மா ஜகாங்கீர் நேற்று மாரடைப்பில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர் மூத்த வழக்கறிஞர் அஸ்மா ஜகாங்கீர். பாகிஸ்தானின் லாகூரில் 1952ஆம் ஆண்டு, ஜனவரி 27ஆம் தேதி பிறந்தவர். அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இளம் வயதில் இருந்தே மனித உரிமைகளின் மீது நாட்டம் கொண்டவராக இருந்தார் அஸ்மா.
பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து சட்டமும் தேர்ந்து வழக்கறிஞராக பணியில் சேர்ந்த அஸ்மா, உலக அளவில் அறியப்பட்ட மனித உரிமை வழக்கறிஞர் ஆவார். மனித உரிமைகள் பறிக்கப்படும் போது யாருக்கும் அஞ்சாமல் குரல்கொடுத்தும், சிறுபாண்மையினரின் நலன் சார்ந்த பிரச்சனைகளை தொடர்ந்து விவாதித்தும் வந்தவர்.
பாதிக்கப்பட்டவர்களின் வழக்கு நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் துணிந்து வாதாடி, அதில் பெரும்பாலும் வெற்றிபெற்றுத் தந்த அஸ்மா, பணத்தை எதிர்பார்த்திடாதவர். இதுகுறித்து அஸ்மாவின் உதவியாளராக நான்கு தசாப்தங்கள் பணியாற்றிய சவுத்ரி அக்தர் அலி, ‘அஸ்மா தன் வாழ்நாளில் எதிர்கொண்ட பாதிக்கும் மேலான வழக்குகளில், அவர் எந்தக் கட்டணமும் வசூலித்ததில்லை. அதேசமயம், இதை வெளியில் பெருமையாகவும் சொல்லிக்கொள்ள விரும்பாதவர்’ என புகழாரம் சூட்டுகிறார்.

தொடர்ந்து அவர், ‘ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண் அஸ்மாவின் அலுவலகத்திற்கு வந்தார். தனது மகனை தன் கணவர் கடத்திவிட்டதாகவும், அவரிடமிருந்து தன் மகனை மீட்டுத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்த அஸ்மா அதில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ஜப்பான் பெண்ணிடம் போதுமான பணம் இல்லை. எனவே, தன் சொந்தப் பணம் 14 லட்ச ரூபாயை செலவழித்து ஷ்யூரிட்டி பத்திரத்தை அந்தப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்தவர் அஸ்மா’ என நினைவுகூருகிறார்.
பாகிஸ்தானில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ஜியா உல் ஹக் காலத்தில் ராணுவத்தை எதிர்த்ததற்காக 1983ஆம் ஆண்டு சிறைவாசம் சென்றவர் அஸ்மா. தொடர்ந்து ராணுவ நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், அரசால் நாடுகடத்தப்பட்டவர்களை மீட்கவும் நீதிமன்றங்களில் வாதிட்டார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் அஸ்மா.
தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வந்த அஸ்மா, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவனர்களுள் ஒருவராவார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான அஸ்மா, நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மகள் முனிஜே ஜகாங்கீர் தெரிவித்திருக்கிறார்.
ஒப்பற்ற மனித உரிமைப் போராளியான அஸ்மா ஜகாங்கீரின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன், ‘குரலற்றவர்களின் குரலாக வாழ்ந்த, ஒழுக்கத்துக்கும், தைரியத்துக்கும் பேர்போன அஸ்மா ஜகாங்கீரை இன்று பாகிஸ்தான் இழந்திருக்கிறது’ என வருத்தம் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் நிசப்தம் அடைந்திருக்கிறது. அணையா தீபமாக மிளிர்கிறார் அஸ்மா.