ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்குச் சம்மதித்தது.
இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்க இருக்கிறது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்திவருவதால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் சாத்தியம் குறைவு எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், " எங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்க வேண்டிய அவசியத்தின் பேரில் இந்த தாக்குதலை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். பிற நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்குச் சிறிதும் இல்லை. ஆனால் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாகப் பிற நாடுகள் அணி திரண்டால் அது வேறு சில விரும்பத்தகாத முடிவுகளுக்கு வித்திடும். அதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அவ்வாறு ஒரு தாக்குதல் நடந்தால், அது இதுவரை நடக்காத ஒன்றாக இருக்கும். மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அதில் நிச்சயம் அணு அயுதம் பயன்படுத்தப்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதை எங்கள் நாடு விரும்பவில்லை, ஆனால் எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இதுவரை அணு ஆயுதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத ரஷ்யா, உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் அந்த நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அணு ஆயுத தாக்குதல் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவை விட அதிக அளவு அணு ஆயுதங்களை ரஷ்யா கையிருப்பில் வைத்துள்ளது. சுமார் 6000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ரஷ்யா தங்கள் நாட்டில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.