சர்வதேச பணப்பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை நீக்கி உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது ஆவேசமாக போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி திரண்டுள்ளனர். ரஷ்யா மீது பல்வேறு விதமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விரைவான சர்வதேச பணப் பரிவர்த்தனையான 'SWIFT' எனப்படும் வங்கி முறையில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 நாடுகளில் உள்ள 11,000 நிதி நிறுவனங்களால் 'SWIFT' சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்த 'SWIFT' முறையில் இருந்து ரஷ்யாவின் வங்கிகளை நீக்கி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் சர்வதேச அளவில் ரஷ்யாவால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்படும். எண்ணெய் ,எரிவாயு உள்ளிட்ட ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவது தாமதமாகும். இருப்பினும், பிற அமைப்புகள் மூலம் பணம் பெற ரஷ்யா முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பாக, சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையிலான கட்டண முறையை ரஷ்யா பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
'SWIFT' முறைக்கு ரஷ்யாவுக்கு தடை விதித்தால், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை ரஷ்யா அனுப்பாது என்று ஏற்கனவே அந்நாடு எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணெய் ஏற்றுமதி கேள்விக் குறியாகியுள்ளது.