தென் கொரியாவில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மை கோல்டன் கிட்ஸ்’ என்ற நிகழ்ச்சி அந்த நாட்டில் மிகவும் பிரபலமானது. இதில் கடந்த 21ஆம் தேதி அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 4 வயது சிறுவனான கியூம் ஜி-யூன் என்ற சிறுவன் கண்கலங்கி பேசும் வீடியோ பார்ப்போரை மனம் நெகிழ வைத்திருக்கிறது.
‘மை கோல்டன் கிட்ஸ்’ நிகழ்ச்சி பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் நிகழ்ச்சி ஆகும். அதில் பங்கேற்ற சிறுவன் கியூம் ஜி-யூன் தான் தனிமையில் தவிப்பதாக கூறினார். இது தொடர்பான வீடியோ உலகம் முழுவதும் பரவி கண்கலங்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில் கியூம் ஜி-யூனிடம், ‘உனக்கு அப்பா, அம்மா இருவர்களில் யாரை ரொம்ப பிடிக்கும்’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த கியூம், “எனக்கு தெரியவில்லை. எப்போதுமே வீட்டில் நான் மட்டும் தான் தனியாக இருப்பேன். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள். எனது தந்தை எப்போதுமே என்னிடம் அச்சுறுத்தும் வகையில் தான் நடந்து கொள்வார். அவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
மேலும், அந்த சிறுவனிடம் தாய் குறித்து கேட்கும் போது, கண்ணீர் சிந்தியபடி, “அவருக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டு அழுகிறார். அதன் பின்பு தன்னை தானே சமாதானப் படுத்திக்கொண்டு மீண்டும் பேசிய அவர், “நான் சொல்வதை என் அம்மா எப்போதுமே கேட்க மாட்டார். அவருடன் நான் விளையாட வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், எப்போதுமே என்னை திட்டிக்கொண்டே இருப்பார்” என்று கூறினார் அந்த சிறுவன். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.