அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ட்ரம்ப் நடந்துகொள்ளும் விதம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில் பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ட்ரம்ப் தரப்பின் இத்தகைய செயல் குறித்து பேசியுள்ள பைடன், "ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது. ட்ரம்ப்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இல்லை. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலிலிருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நான் நம்புகிறேன். அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தரப்பு கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது எந்த வரை ஆதாரங்களும் இல்லை. குடியரசு கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.