உயிரிழந்த தந்தையின் உடலை சொகுசு காருக்குள் வைத்து மகன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள அனம்ப்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜுபுகி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச்சடங்கை பி.எம்.டபிள்யூ காரில் வைத்து நடத்துவதாகவும், அவரை அதில் வைத்தே புதைப்பதாகவும் வாக்கு தந்திருந்தார்.
அதை நிறைவேற்றும் விதமாக இந்திய மதிப்பில் ரூ.42 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்றை விலைக்கு வாங்கி, அதை தனது தந்தையின் சவப்பெட்டியாக மாற்றியிருக்கிறார் அந்த பாச மகன். குழிக்கு அருகில் ஒரு கார் நிற்க, அதைச் சுற்றி கறுப்பு உடை அணிந்த சிலர் இறுதிச்சடங்கை செலுத்தும் இந்தப் புகைப்படம் முகநூலில் பல ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது. இதை பைத்தியக்காரத் தனம், சுயநலம் என ஒருவரும், பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு இதைச் செய்யவேண்டும்; அவர்கள் இறந்தபின்னர் நல்ல சவப்பெட்டியில் புதைக்கவேண்டும். இப்படி முட்டாள்தனமாக பந்தா செய்யக்கூடாது என ஒருவரும் என பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது தந்தையை, அவர் நீண்டகாலம் பயன்படுத்திய காருக்குள் வைத்து புதைத்தது குறிப்பிடத்தக்கது.