சிங்கப்பூரில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் இன்னும் 10 மாதங்களில் முடிவடையும் நிலையில், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் லீ. கரோனா வைரஸுக்கு மத்தியில் நேற்று நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு முகக் கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், வாக்களிக்கக் கூடுதலாக இரண்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. நேற்று மாலை தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதில், மக்கள் செயல் கட்சி, போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது ஆளும் கட்சி. சிங்கப்பூரில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.