Skip to main content

துருக்கியில் நிலநடுக்கம்; 3 நாட்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்த ஆராய்ச்சியாளர்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

Researcher Frank Hoogerbeetz accurately predicted  Turkey earthquake 3 days back

 

துருக்கியில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.  அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாப்பாடு, குடிநீர் இன்றி இடிபாடுகளில் சிக்கி இருக்கும் தங்களது உறவுகளை கண்ணீருடன் தேடி வருகின்றனர். 

 

இந்நிலையில் நிலநடுக்கம் குறித்து டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து ட்விட் செய்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், தெற்கு மற்றும் மத்திய துருக்கி, ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வரைபடத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதைப் போலவே நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இந்த துல்லிய கணிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்