இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து இலங்கை மொரட்டுவை மேயர் வீட்டிற்கு தீவைக்கப்பட்டதோடு, கலவரத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டார்.
இதனால் இலங்கை முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராணுவம் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது. இந்நிலையில் ராஜபக்சே தனது குடும்பத்தாருடன் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தற்பொழுது ராஜபக்சேவின் குடும்ப உறுப்பினர்கள் திருமலையில் உள்ள படைமுகாமில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.