ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக போர்க்கொடி!
ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படவிருக்கும் அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இந்திய பெருமுதலாளிகளில் ஒருவரான அதானி, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்தை அமைக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் அமைக்கப்பட இருக்கும் இந்த சுரங்கம், நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலக்கரி சுரங்கத்தின் வேலைகள் சுற்றுச்சூழல் காரணங்களால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள், இந்த கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படக் கூடாதென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி STOP ADANI என்ற எழுத்துகளைப் போல நின்று நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்த நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் அழியும் நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்படும் மற்றும் உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைந்துவிடும் போன்ற காரணங்களை முன்வைத்து போராட்டக்குழுவினர் முழக்கங்களை எழுப்பினர்.