கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆண் குழந்தை கூட பிறக்காத அதிசய கிராமம் ஒன்று போலந்து நாட்டில் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

போலந்து நாட்டில் உள்ள மீஜிஸ் ஓட்ரன்ஸ்கி என்ற கிராமத்தில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. சமீபத்தில் இளம் தீயணைப்பு வீரர்கள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சாகச நிகழ்ச்சி ஒன்று அந்நாட்டில் நடந்துள்ளது. அதில் பல ஊர்களை சேர்ந்த சிறுவர்கள், சிறுமியர்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது குறிப்பிட்ட இந்த ஒரு கிராமத்திலிருந்து சிறுமிகள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனையடுத்து அங்கிருந்த அரசாங்க அதிகாரிகள் அந்த சிறுமிகளின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆண் குழந்தை கூட பிறக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
பல ஆண்டுகளாக ஆராய்ந்து பார்த்தும் இன்று வரை அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்கின்றனர் அக்கிராம மக்கள். ஆண் குழந்தை பெரும் தம்பதிகளுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அப்பகுதி மேயர் கடந்த சில ஆண்டுகளாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் அறிவிப்புகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளனவே தவிர அந்த கிராமத்தில் ஆண் குழந்தைகள் மட்டும் பிறக்கவே இல்லை. தற்போது இந்த செய்தி உலகம் முழுவதும் பிரபலமான நிலையில் இது குறித்து ஆராய்ச்சி செய்ய பலர் ஆர்வமாக அக்கிராமத்தை நோக்கி சென்று வருகின்றனர்.