ஜப்பான் நாட்டில் கரோனா பரவல் காரணமாக, அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை அமலிலுள்ளது. மேலும் இந்த அவசரநிலையை நீட்டிக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் ஜப்பான் நாட்டின் துணை கல்வி அமைச்சர் டைடோ தனோஸ் மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவசரநிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்றுள்ளனர். அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசின் கட்டுப்பாடுகளை மீறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா, துணை கல்வி அமைச்சர் டைடோ தனோஸை, துணை அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதனையடுத்து டைடோ தனோஸ் கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். அதேபோல் அவருடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். மற்றொருவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.