சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துமனையில் ரவிக்குமார் என்பவர் துப்பரவு பணியாளராக 23 வருடங்களாக பணிபுரிந்துவந்துள்ளார். ஜி.ஓ.வின் படி ஒன்றறை ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்திருந்தால் அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து அவரது கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு முடித்திருந்தால், அவருக்கு ஓ.ஏ., ஆர்.சி. பணியும். அதேபோல 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் கிளர்க் பணி வழங்க வேண்டும் என்பது விதியாக இருக்கும் பட்சத்தில், போதுமான கல்வித் தகுதி இருந்தும் சாதிய வேறுபாடு காரணத்தால், இதுவரையிலும் எந்தப் பணி உயர்வும் வழங்கப்படாமலும், அவ்வபோது கூடுதல் பணிச் சுமையையும் வழங்கியுள்ளார் கண்காணிப்பாளர் வெங்கடமதுபிரசாத் .
அதற்கு ரவிக்குமார், “எதற்காக இப்படி என்னைப் பழிவாங்கறீங்க” என்று கேட்டதற்கு, சாதி பெயரைச் சொல்லி, “உனக்கு ஓ.ஏ வேலை கேட்குதோ” என்று கண்காணிப்பாளர் வெங்கடமதுபிரசாத் திட்டியுள்ளார் என்று முதல்வர் தனிப்பிரிவுக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையத்திற்கும் மனு அனுப்பிவைத்துள்ளனர். இந்த மனுவின் அடிப்படையில், அயனாவரம் ஏசி சரவணன் தலைமையில் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், குற்றத்தை நேரில் பார்த்தவர்களான லிஃப்ட் ஆப்ரேட்டர் சிவலிங்கம், சீனிவாசன், உதவி மருத்துவர் ராஜ்குமார், ஓட்டுநர் முருகேசன் ஆகியோரிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவரைப் பற்றி கூடுதலாக டாக்டர், செவிலியர், துப்பரவு பணியாளர் என 20 நபர்களிடம் ஒருமாத காலம் விசாரித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கண்காணிப்பாளர் திட்டியது உண்மையே என்றும், “அவர் செய்யும் லீலைகள் எவ்வளவோ இருக்கிறது, சொன்னால் மாளாது” என்று கூறியுள்ளனர்.
இந்த விசாரனை முடிந்து ஒருமாத காலம் ஆகியும் ஏசி சரவணன் இதுவரையிலும் வெங்கடமதுபிரசாத் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் வெங்கட மதுபிரசாத்துக்கு சாதகமாக செயல்பட்டுவருகிறாராம். இந்நிலையில் பாதிகப்பட்ட ரவிகுமார் கூறுகையில், “நான் பதவி உயர்வு கேட்ட காரணத்திற்காக கேவலமான வார்த்தைகளால் பல பேரின் முன்னால் என்னுடைய சாதி பெயரைச் சொல்லி, உனக்கு ஓ.ஏ வேலை கேட்குதா என திட்டி தலைகுணிய வைத்தார். எனக்கு அங்கையே சாகுனும்போல் இருந்தது. என்னை மட்டும் இல்லை, இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இதே கெதிதான் நடக்கிறது. இது தொடர்பாக விசரானை முடிந்து ஒருமாத காலம் ஆகிறது. ஆனால் எந்த நடவடிக்கையுமே இல்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை” என்றார்.
இது தொடர்பாக டாக்டர் வெங்கடமதுபிரசாத்திடம் கேட்டபோது, “அதுபோன்ற எந்த விதமான செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. மேலும் விசாரணை நடந்துவருகிற சூழ்நிலையில் இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்றார். இது தொடர்பாக ஏசி சரவணனிடம் கேட்டபோது, “இன்னும் விசாரனை சென்றுகொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் மற்ற விசயங்களைச் சொல்ல முடியாது” என்றார். வெங்கடமதுபிரசாத் மீது ஏற்கனவே தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் பாலியல் விவகாரம் நிலுவையில் இருந்துவரும் சூழ்நிலைில், தற்போது வன்கொடுமை பிரச்சனையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.