புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது. இந்த சம்பவத்துக்குப்பின் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்தது.
இந்நிலையில், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க கிர்கிஸ்தான் செல்லும்போது பாகிஸ்தான் வழியாகச் சென்றால், 4 மணிநேரமும், மாற்றுப்பாதையில் சென்றால் 8 மணிநேரமும் ஆகும். எனவே பாகிஸ்தான் வான்வழியாக விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியாக செல்ல அனுமதி வழங்குவது என கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளோம். மேலும் இந்தியாவுடன் நல்லுறைவை காக்கவே நாங்கள் விரும்புகிறோம். இதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளார்’’ எனக் கூறினார்.