அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.
இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.