விளையாட்டு வீரர்கள் அணியக் கூடிய நைக் நிறுவனத்தின் ஷூ ஒன்று இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நைக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிவித்தது முதல் இதனை வாங்க பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டனர். அந்த வகையில் கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர் அந்த ‘ஷூ’வை இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என ஏலத்தில் எடுத்தார்.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த 'ஷூ'வில்?
'மூன் ஷூ' என பெயரிடப்பட்ட இந்த ஷூ கடந்த 1972 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. நைக் நிறுவனத்தின் நிறுவனரும், தடகள பயிற்சியாளருமான பில் போவர்மேன் அப்போதைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க வீரர்களுக்காக தனிப்பட்ட முறையில் சிறப்பாக செய்த ஷூ இது. 1972 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்காக வெறும் 12 ஜோடி ஷூக்கள் மட்டுமே இந்த மாடலில் செய்யப்பட்டது. 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது மூலம் உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன ஷூ என்ற பெருமையை இந்த 'மூன் ஷூ' பெற்றுள்ளது.