பிரபல வைர நகை வியாபாரியான நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 13000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து திரும்ப செலுத்தாமல் சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.
இந்த மோசடி குறித்து சிபிஐ அமலாக்கதுறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. அதேபோல் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிரவ் மற்றும் அவர் உறவினர் மெகுல் இருவரையும் இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் புலனாய்வுத் துறைக்கு அனுமதி அளித்திருந்தது.
அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை பிடிக்க உத்தரவிடும்படியும், நாடுகடத்த கோரியும் இங்கிலாந்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இந்திய வெளியுறவுத் தூதரகம் அந்த கடித்தை இங்கிலாந்து அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசால் வலியுறுத்தப்பட்ட நிலையில் அந்த கடிதம் இங்கிலாந்து அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை பரிசீலித்த இங்கிலாந்து நிரவ் மோடி தங்கள் நாட்டிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் நிரவ் மோடி இங்கிலாந்தில் தலைமறைவாகி இருந்தது உறுதியாகியிருக்கிறது. மேலும் நிரவ் மோடியை கைது செய்ய இன்டர்போல் அதிகாரிகள் ரெட் கார்னெர் நோட்டிஸ் வெளியிட்டுள்ளதால் அவரை கைது செய்யுமாறு இங்கிலாந்து அதிகாரிகளிடம் சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.