கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்திருந்த ஆராய்ச்சியாளரின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளது அந்நிறுவனம்.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற விவாதம் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பெரும்பாலானோர் இந்த வைரஸ் இயற்கையானது எனக் கூறினாலும், ஒரு சில ஆய்வாளர்கள் இது செயற்கையானது எனக் கூறிவருகின்றனர். அந்தவகையில், சீனாவைச் சேர்ந்த மருத்துவர், நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி -மெங்-யான் என்பவர் வுஹானின் உள்ள அரசு ஆய்வகத்தில் தான் கரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது எனக் கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், ஆய்வகத்தில் வைரஸ் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்துகள் நம்பத்தகுந்தவை அல்ல எனப் பெருவாரியான ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சீனா கரோனா வைரஸை எதற்காக உருவாக்கியது என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் விரைவில் வெளியிட உள்ளதாக லி-மெங்-யான் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அவரது ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.