அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 44 பேரை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு அப்புறப்படுத்திய சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் நடந்துள்ளது.
போதைப்பொருள் உபயோகத்திற்கு பெயர்போன மெக்ஸிகோ நாட்டில், போதைப்பொருள் விற்பனை கும்பல்களால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் குவாடலஜரா நகரில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த போலீசார் கிணற்றை ஆராய்ந்து பார்த்ததில் 119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேரின் உடல்கள் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. போதை பொருள் தொழில் போட்டி காரணமாக கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலையானவர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.