தன்னை சிறையில் அடைத்திருந்தபோது, தனது அறை மற்றும் குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் தெரிவித்திருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் கடந்த ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் தற்போது கட்சிப் பணிகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த மரியம் நவாஸ், சிறையில் தான் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நான் இரண்டு முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன், நான் ஒரு பெண்ணாகச் சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றிப் பேசினால், ஆளுங்கட்சியினர் அவர்கள் முகங்களைக் காண்பிக்கும் தைரியம் இருக்காது. அதிகாரிகள் என் அறைக்குள் நுழைந்து, என் தந்தை நவாஸ் ஷெரீப்பின் முன்னால் என்னைக் கைது செய்து, என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த முடியுமானால், பாகிஸ்தானில் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை என்பதே அர்த்தம். தான் தங்கியிருந்த சிறையிலும் குளியலறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன" எனத் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் கேமரா வைக்கப்பட்டிருப்பதாக அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.