
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா என்கிற இஸ்லாமியப் பெண் ஒருவர், தனது நான்கு குழந்தைகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் காதலனுடன் இணைவதற்கு இந்தியா வந்தார். இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது காதலனைப் பார்க்க பாகிஸ்தானிற்குச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம், பிவாடி பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(35). இவருக்குத் திருமணமாகி அரவிந்த் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஜூலை 21ஆம் தேதி அன்று அஞ்சு பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பகுதுன்வாவிலுள்ள தனது ஆண் நண்பரைச் சந்திக்க சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் அப்பர் திர் மாவட்டக் காவல்துறையினர் அஞ்சுவிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவர்கள் நடத்திய அந்த விசாரணையில் அவர் “சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் தனக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தச் சூழ்நிலையில், எனது கணவனையும் குழந்தைகளையும் விட்டு எனது காதலனைச் சந்திக்க சுற்றுலா விசா மூலம் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் வந்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், அஞ்சுவிடம் இருந்த பயண ஆவணங்களான பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், அஞ்சு மீது நடவடிக்கை எடுக்காமல் பாகிஸ்தான் காவல்துறையினர் அவரை விடுவித்தனர். இப்போது அஞ்சுவும், அவரது காதலனும் பாகிஸ்தானின் அப்பர் திர் மாவட்டத்தில் இருக்கின்றனர். இதனிடையே, அஞ்சு, பாகிஸ்தான் சென்றிருக்கிறார் என்ற தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அறிந்த ராஜஸ்தான் காவல்துறையினர், அஞ்சுவின் வீட்டிற்குச் சென்று அவரது கணவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், அஞ்சு கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். மேலும் அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருப்பதால் தனது ஆண் நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன் அஞ்சு தனது கணவருடன் வாட்ஸ்அப் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் தற்போது லாகூரில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதுகுறித்து அஞ்சுவின் கணவர் காவல்துறையினருக்கு எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அஞ்சுவுக்கும் அவரது கணவருக்கும் 15 வயதில் ஒரு பெண்ணும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.