அரிய வகை புலியான சுமத்ரன் இனப் புலி இனவிருத்திக்காக லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரிய வகையான சுமத்ரன் புலி வகையில் மெலாட்டி எனும் பெண் புலி லண்டனில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவந்தது. இதற்கு இணையாகவும் இனவிருத்திக்காகவும் அசிம் எனும் ஆண் புலி ஒன்று வரவழைக்கப்பட்டது. முதலில் மெலாட்டி இருக்கும் இடத்திற்கு எதிரே அசிமை வைத்து இரண்டு புலிகளுக்கும் இடையேயான அச்சத்தைப் போக்கி உறவை வளரவைக்கும் முயற்சியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டது. அதன்பின் மெலாட்டியுடன் அசிமை இணைசேர்க்க, மெலாட்டி புலியுடன் அசிமை ஒன்றாக விட்டுள்ளனர். இரண்டும் ஏழு நாட்கள் நன்றாக பழகிவர திடீரென இரண்டுக்கும் மத்தியில் பெரும் சண்டை எழுந்துள்ளது. இதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் ஒலிகளை எழுப்பியும், தீயைக் காட்டியும் புலிகளின் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத மெலாட்டியும், அசிமும் ஒருகட்டத்திற்கு மேல் இன்னும் தீவிரமாக சண்டையிட கடும் கோபத்தில் அசிம் எனும் புலி மெலாட்டியை கொன்றுள்ளது.
இதுகுறித்து லண்டன் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு புலிகளையும் முறையாகத்தான் கவனித்து வந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்வு நடந்துவிட்டது. இந்த நிகழ்வால் பூங்கா நிர்வாகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.