சட்டப்பேரவையில் இன்று, கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரையாற்றினார். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாராகிவிட்டது எனவும், மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து மே மாதத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல் ''காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்படும்.10 ஆம் வகுப்பு படித்து ஐடிஐ, பாலிடெக்னிக் படித்து வரும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்'' என்ற அறிவிப்பையும் நிதியமைச்சர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம், தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மீது பதிலுரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, ஏற்கனவே சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் 24 ஆம் தேதி வரை பேரவையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.