பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வடகொரியா மற்றும் அமெரிக்க இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த சந்திப்பு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்றாலும் இறுதிவரை கிம் ஜாங் உன் மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெறுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அனைத்து உலக நாடுகள் மத்தியிலும் நிலவிவந்தது. ஆனால் திட்டமிட்டபடி இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்துக்கொண்டனர்.
சிங்கப்பூரில் நடந்த இந்த சரித்திர சந்திப்பு பல சுவாரஸ்யங்களை கொண்டதாக இருந்தது. எப்போதுமே வடகொரியா, அதிபர் கிம் ஜாங் உன் மீதான பாதுகாப்பில் முக்கியதுவம் அளித்துவருகின்ற சூழலில் இந்த முக்கிய சந்திப்பில் அவருடைய பாதுகாப்பு கருதி பல ஏற்பாடுகளை வடகொரியா மேற்கொண்டது. அந்த வரிசையில் சிங்கப்பூர் வரும்பொழுதே அவருடனே ஒரு பிரத்யேக கழிவறை கொண்டுவரபட்டது. அதாவது அவருடைய கழிவிலிருந்து அவருடைய உடல் நிலை பற்றி மற்ற நாடுகள் அறிந்துகொள்ளக்கூடாது எனவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல் சிங்கப்பூர் வந்ததிலிருந்து டிரம்ப் உடனான சந்திப்பின் போது நடந்த மதிய உணவு நேரத்தில் மட்டும் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டார் கிம் ஜாங் உன் மற்ற நேரங்களில் அவருக்காகவே வடகொரியாவில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் உடன் வரவைக்கபட்டிருத்தனர் எனவே வடகொரிய உணவைதான் உட்கொண்டார். சாப்பாடு மட்டுமல்ல அவர் எழுதக்கூடிய பேனா, பென்சில் என அனைத்தும் அங்கிருந்தே வரவழைக்கப்பட்டது. அதேபோல் அவரது கைரேகைகூட ஒரு இடத்திலும் பதியவிடாமல் பார்ததுக்கொண்டனர்.
அவருடைய பயணம் கூட இறுதிவரை மிக ரகசியமான முறையிலேயே நடந்தது. வடகொரியாவின் அதிபராக 2011-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் பதவியேற்றத்திலிருந்து அவருடைய முதல் நீண்ட பயணம் என்பதால் அதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. வடகொரிய தலைநகர் பியங்காங்கில் மூன்று விமானங்கள் நிறுத்தப்பட்டது அதில் எந்த விமானத்தில் அவர் பயணிப்பார் என்பது இறுதிவரை ரசியமாக வைக்கப்பட்டது.
அதேபோல் பியங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு பயண நேரம் ஆறு மணிநேரம் என்றாலும் பியங்காங்கிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வந்தார் கிம் ஜாங் உன். வடகொரியா- ஷாங்காய் வழி விமான பயணம் கடல் மீதானது என்பதால் பெய்ஜிங் வழி தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படி பல பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இந்த சந்திப்பு நடந்துமுடிந்தது.